ஜகத் லியன ஆராச்சி, சட்டத்தரணி
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்கும், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டக் கட்டமைப்பைக் கொண்டு அதனை பிரதியிடுவதற்குமாக “பயங்கரவாத தடுப்பு சட்டமூலம்” 22 மார்ச் 2023 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. சட்டமூலத்தின் சுருக்கமான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பயங்கரவாத தடுப்பு சட்டங்களின் வரலாறு
இலங்கையில், பயங்கரவாதம் தொடர்பான ஆரம்ப சட்ட ஏற்பாடுகள் 1947 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதுடன், இது பயங்கரவாத தடுப்பு சட்டம் அல்லாது, மாறாக தேசிய அனர்த்தம் அல்லது பாரிய விபத்து போன்ற சூழ்நிலைகளை கையாள்வதற்காக நிறைவேற்றுனர்களுக்கு தற்காலிகமாக மேலதிக அதிகாரங்களை வழங்கும் சட்ட கட்டமைப்பாகும். இது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லையென்றாலும், பயங்கரவாதச் செயல்கள் என அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்படும் செயற்பாடுகளைத் தடுப்பதற்கும், அந்தச் செயல்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கும் அவசரகாலச் சட்டம் உறுதுணையாக இருந்தது. அந்த அமைப்புகளைத் தடை செய்வதற்கு அவசரகாலச் நிலைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. 1971 இல், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசர நிலையைப் பிரகடனம் செய்வதன் மூலம் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
1978 ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தில் கிளர்ச்சி நடவடிக்கைகள் அதிகரித்த போது, நாடாளுமன்றம் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தடைச் சட்டத்தை நிறைவேற்றி, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதையொத்த பிற அமைப்புகளை தடை செய்தது. இலங்கையின் வரலாற்றில் நிறைவேற்றப்பட்ட முதலாவது பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்று இதனைக் கூறலாம்.
பின்னர் ஜூலை 1979 இல், 1978ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) நிறைவேற்றப்பட்டதுடன், இது முன்னர் குறிப்பிடப்பட்ட சட்டத்தை ரத்து செய்தது. இந்த தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் மூன்று வருட காலத்திற்கு இயற்றப்பட்டாலும் இன்றுவரை அமுலில் உள்ளது. 1982ல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிரந்தரமாக்கப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக விதிகள்) சட்டத்திற்கு எதிரான விமர்சனம்
இந்த சட்டமூலத்திற்கான முக்கியமான எதிர்ப்புகள்:
சட்டத்தின் கீழான குற்றங்களை மிகவும் பரந்த அளவில் விபரிக்க முடியும் என்பதால், பொதுச் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் கூட பாதுகாப்புப் படைகள் குடிமக்களை ஒடுக்குவதற்கு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தலாம்.
ஊடகத்துறையை கட்டுப்படுத்தும் நடைமுறையிலுள்ள ஏற்பாடுகள் பேச்சு சுதந்திரத்தை கடுமையாக கட்டுப்படுத்துகிறது.
ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உயர் பொலிஸ் அதிகாரியிடம் அளிக்கப்படும் வாக்குமூலம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரமாகப் பயன்படுத்தப்படலாம்.
கைது செய்யப்பட்ட நபரை 18 மாதங்கள் வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்க பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் உள்ளதுடன் அதனை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது.
வழக்குகள் முடிவடையும் வரை ஜாமீன் வழங்க அதிகாரம் இல்லாமை. இதன் காரணமாக வழக்கு தொடரப்படாத பலர் இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர், 2022ஆம் ஆண்டு இயற்றப்பட்ட திருத்தத்தின் மூலம், ஓராண்டுக்குப் பிறகு ஜாமீன் வழங்கும் வகையில் சட்ட ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டன.
புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான கலந்துரையாடல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட LLRC ஆணைக்குழுவின் அவதானிப்புகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன், 2015 செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் புதிய சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியது. 2017 முதல் 2021 வரையான காலப்பகுதியில் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய செயற்திட்டத்தில் புதிய சட்டத்தின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
பின்னர், செப்ரெம்பர் 14, 2018 அன்று, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வருவதற்காக, “பயங்கரவாத தடுப்பு சட்டமூலம்” என்ற தலைப்பில் அரசாங்கம் ஒரு வரைவை வர்த்தமானியில் வெளியிட்டது. இது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு முதலாவது வாசிப்பு அக்டோபர் 9, 2018 அன்று திட்டமிடப்பட்டது. வரைவு சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை ஆராய்வதற்காக ஏழு கட்சிகள் உச்ச நீதிமன்றத்திற்கு சட்டமூலத்தை பரிந்துரைத்தன. உச்ச நீதிமன்றம் 41/2018 முதல் 47/2018 வரையிலான மனுக்களை ஆராய்ந்து, சட்டமூலத்தின் நான்கு பிரிவுகள் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அவற்றிற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளும் மற்றும் அதை நிறைவேற்றுவதற்கு பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பில் ஒப்புதலும் தேவைப்பட்டது. மேலும், தீர்ப்பில் அந்த சரத்துக்கள் தொடர்பான மாற்று ஏற்பாடுகளை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதன்படி, சட்டமூலத்தை அப்போதைய அரசு முன்னெடுத்தது.
புதிய சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள்
புதிய வரைவை சட்டப்பூர்வமாக பகுப்பாய்வு செய்யும் போது வரைவின் முக்கிய கூறுகளுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும். அதன்படி, வரைவின் நோக்கங்கள், சட்டத்தின் பொருத்தப்பாடு, பயங்கரவாதம் தொடர்பான குற்றம், விசாரணை செயன்முறை, கைது மற்றும் காவலில் வைத்தல், வழக்கு செயன்முறை, சட்டத்தின் கீழ் அதிகாரிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள், பொலிசாரின் விசேட பயங்கரவாத தடுப்பு அலுவலகம், விசேட புலனாய்வு அதிகாரங்கள், குற்றவியல் வழக்குகளை ஒத்திவைக்கும் சட்டமா அதிபரின் அதிகாரம், ஜனாதிபதியால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படல், மீளாய்வு சபையை நியமித்தல் ஆகியவை கருத்தில் கொள்ள வேண்டிய கூறுகளாகும்.
சட்டத்தின் நோக்கம்
இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதச் செயல்களில் இருந்து இலங்கை மக்களைப் பாதுகாத்தல், இலங்கைப் பிரதேசங்களையும் மக்களையும் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுத்தல், பயங்கரவாதச் செயல்களை விசாரித்தல், பயங்கரவாதிகளைக் கைது செய்தல் மற்றும் விசாரணை செய்தல், அத்துடன் 1979 ஆம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் ஆகியன சட்டமூலத்தின் ஆரம்பத்திலேயே கூறப்பட்டுள்ளபடி புதிய சட்டமூலத்தின் நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டமூலத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளபடி, பயங்கரவாதம் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும். எனவே, இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்தின் நலனுக்காக பயங்கரவாதத்தை தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அரசாங்கம் கட்டுப்பட்டிருப்பதால், பயங்கரவாதத்திற்கு எதிரான நீதியான மற்றும் நியாயமான குற்றவியல் நீதியியல் அமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.
பயங்கரவாதத்தின் குற்றம்
இந்த சட்டமூலத்தில் உள்ள மிக முக்கியமான விடயம், பயங்கரவாதக் குற்றத்தை வரையறுக்கும் விதம், பின்வருவனவற்றை உள்ளடக்கியதாகும்:
- கொலை
- கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்
- பணயக்கைதிகள்
- ஆட்கடத்தல் அல்லது கடத்தல்
- பொது/தனியார் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துதல்
- அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு
- அரச அல்லது தனியார் சொத்துக்களை சூறையாடுதல்
- இலங்கையில் உள்ள இலத்திரனியல் அமைப்பு, கணினி அமைப்பு அல்லது வலையமைப்பு அல்லது இணையத்தளத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துதல்
- மத அல்லது கலாச்சார சொத்துக்களை அழித்தல்
- தொலைத்தொடர்பு அமைப்புக்கு சேதம் விளைவித்தல்
- மேற்கூறிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வில் பங்கேற்பவராக இருத்தல்
- அனுமதியின்றி துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களின் சேகரிப்பு
சட்டமூலத்தின் 3வது பிரிவின்படி, இந்தச் செயல்களில் ஏதேனும் பின்வரும் நோக்கங்களுக்காக நிகழ்த்தப்பட்டால், அது பயங்கரவாதச் செயலாகும். இச்சட்டத்தில் இந்த குற்றங்களுக்கு மரண தண்டனை வரை தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
- பொதுமக்களையோ அல்லது பொதுமக்களின் எந்தப் பிரிவினரையோ அச்சுறுத்தும் நோக்கம்
- இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு எந்த அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ எந்தவொரு செயலையும் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு தவறாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ வற்புறுத்துவது அல்லது;
- அத்தகைய அரசாங்கத்தின் செயற்பாட்டை சட்டவிரோதமாக தடுப்பது;
- இலங்கை அல்லது வேறு எந்த இறையாண்மை கொண்ட நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையை மீறுதல், அல்லது
- தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் நோக்கத்துடன் போர் அல்லது பாகுபாடு, பகை அல்லது வன்முறையை ஊக்குவித்தல்
இதன்மூலம், பயங்கரவாதக் குற்றம் மிகவும் பரந்த அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. குறிப்பாக, அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு இடையூறு விளைவிப்பது அல்லது அத்தகைய செயற்பாட்டின் உறுப்பினராக இருப்பது சட்டத்தின்படி பயங்கரவாதக் குற்றமாக கருதப்படுகிறது. எனவே, அத்தியாவசிய சேவையாக விதிக்கப்பட்ட சேவை தொடர்பான தொழிற்சங்க நடவடிக்கைகளும் பயங்கரவாதக் குற்றமாக குற்றம் சாட்டப்படுவதற்கான அதிகரித்த நிகழ்தகவு உள்ளது.
மேலும், தண்டனை சட்டக்கோவையில் உள்ள சாதாரண குற்றங்களை பயங்கரவாத குற்றங்களாக வரையறுக்கும் தற்றுணிபை பொலிசாருக்கு இந்த சட்டம் வழங்குகிறது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருப்பதும், அத்தகைய அமைப்பில் ஈடுபடுவதும் கூட குற்றமாகும் என்று சட்டமூலத்தின் 6வது உறுப்புரை கூறுகிறது. ஒரு நிறுவனத்தை தடை செய்யப்பட்ட அமைப்பாக பெயரிடுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது (பிரிவு 82).
மேலும், வரைவின் 10வது உறுப்புரையின் பிரகாரம், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது குற்றமாகும். மேலும், பயங்கரவாதம் தொடர்பான குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையில் ஊடகங்களில் அறிக்கை வெளியிடுவதும் குற்றமாகும். அந்தப் பிரிவு மற்றும் பிரிவு 10(5) இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, ஒரு நபர் உயர் நீதிமன்றத்தில் தனது செயலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று நிரூபித்தால், அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது. இது வழக்கில் ஆதாரத்தை நிரூபிக்கும் பொறுப்பை மாற்றுகிறது. இது குற்றமற்றவர் என்ற அனுமானத்திற்கு எதிரான ஒரு ஏற்பாடாகும்.
வரைவின் 11வது பிரிவின் பிரகாரம், பயங்கரவாத அறிக்கைகளை வெளியிடுவதும் கூட குற்றமாகும். ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அந்த அறிக்கைகளை வெளியிட தான் அனுமதி வழங்கவில்லை அல்லது பயங்கரவாதம் குறித்த தனது கருத்துக்கள் சேர்க்கப்படவில்லை என்று நிரூபித்தால், அவர் இந்தக் குற்றத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட மாட்டார். இந்த ஏற்பாடு கூட குற்றமற்றவர் என்ற அனுமானத்திற்கும் எதிரானது. மேலும், வரைவின் 15வது பிரிவு, பொலிசாரிடம் தகவல்களை மறைப்பது பயங்கரவாதச் செயல் என்று குறிப்பிடுகிறது.
சட்டத்தின் கீழ் (பிரிவு 19) குற்றங்களுக்கு பிடியாணை இல்லாமல் கைது செய்வதற்கு ஒரு பொலிஸ் அதிகாரி, ஆயுதப்படை அதிகாரி அல்லது கடலோர காவற்படை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) ஏற்பாடுகளின்படி, பயங்கரவாதச் செயல் தொடர்பாக கைது செய்வது, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் எழுத்துப்பூர்வ உத்தரவின் பேரில் உப பொலிஸ் பரிசோதகரால் அல்லது உயர் அதிகாரியால் செய்யப்பட வேண்டும்.
விசாரணை நடைமுறைகள் தொடர்பான உத்தேச சட்டத்தின் விசேட அம்சங்கள்
முன்மொழியப்பட்ட சட்டம் இலங்கை பொலிஸ்துறையில் பயங்கரவாத விசாரணைக்காக “விசேட பயங்கரவாத தடுப்பு முகவரகம்” என்ற விசேட பிரிவையும் நிறுவுகிறது. பாரம்பரிய பொலிஸ் பயிற்சி பெற்ற அதிகாரிகளுக்கு மேலதிகமாக, இந்த பிரிவு சட்ட விவகாரங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தடையவியல் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணர்களைக் கொண்டிருக்கும். மேலும், புலனாய்வுப் பணிகளுக்காக பல்வேறு அரச நிறுவனங்களின் நேரடி ஆதரவைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விசாரணை நோக்கங்களுக்காக தேவையான உத்தரவுகளை வழங்குவதற்கு நீதிவானின் தற்றுணிபை மட்டுப்படுத்த ஒரு ஏற்பாடு சேர்க்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் அத்தியட்சகரின் கோரிக்கையின் பேரில் அத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள்
பயங்கரவாதச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியம், கைது செய்யப்பட்டமை தொடர்பில் உறவினர்களுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம், அத்துடன் 72 மணித்தியாலங்களுக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டிய தேவைப்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் சட்டத்தின் தவறான பயன்பாட்டைத் தணிக்கும் திறனை உருவாக்குகின்றன.
இது வழக்குத் தொடராமல் தடுப்புக் காவலில் வைக்கும் காலத்தை அதிகபட்சமாக ஒரு வருடத்திற்குக் மட்டுப்படுத்துவதன் மூலமாக சந்தேக நபர்களின் உரிமைகளையும் புலனாய்வாளர்களின் பொறுப்புகளையும் வலியுறுத்துகிறது. இதன்படி, தற்போதுள்ள சட்டத்துடன் ஒப்பிடுகையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக் காவல் உத்தரவுகளின் பேரில் தடுத்து வைத்தல்
பொலிஸ் நிலையத்தின் கோரிக்கையின் பேரில் மூன்று மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உள்ளதுடன், மூன்று மாதங்களுக்குப் பிறகு தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவுகளை நீட்டிக்கும் அதிகாரம் நீதிவான் ஒருவருக்கு உள்ளது. ஒருவர் அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்படலாம். தற்போதுள்ள சட்டத்தின்படி, அதிகபட்சமாக 18 மாதங்கள் வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இதன்படி, தடுப்புக்காவல் உத்தரவுகளை வழங்கும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு மாற்றுவதற்கு இந்த வரைவு முன்மொழிகிறது.
வழக்கு செயன்முறையை நிறுத்திவைத்தல் அல்லது ஒத்திவைத்தல்
சட்டத்தின் பிரிவு 71, எந்தவொரு பயங்கரவாதச் செயலிலும் ஈடுபடும் நபர்கள் மீதான வழக்கு செயன்முறையைஇடைநிறுத்த அல்லது ஒத்திவைக்க சட்டமா அதிபருக்கு விசேட அதிகாரங்களை வழங்குகிறது.
பொது இடங்களை தடை செய்யும் அதிகாரம்
சட்டமூலத்தின் 62வது பிரிவின்படி, ஆபத்தை அல்லது சேதாரத்தை தவிர்ப்பதற்காக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மக்கள் நுழைவதைத் தடுத்தல், அந்தப் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றுதல், வீதியில் நடமாடுவதைத் தடுத்தல், போக்குவரத்தைத் தடுத்தல் போன்ற உத்தரவுகளை பொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு குறையாத அதிகாரியால் பிறப்பிக்க முடியும். இந்த ஏற்பாடு பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சமமானதாகும்.
அமைப்புகளை தடை செய்வதற்கான ஜனாதிபதியின் அதிகாரங்கள்
சட்டமூலத்தின் 82வது உறுப்புரை, சில அமைப்புகளையும் அவற்றின் செயற்பாடுகளையும் தடை செய்யும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. உறுப்புரை 84 இலங்கையின் ஒரு பகுதிக்கு அல்லது முழு நாட்டிற்கும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. உறுப்புரை 85, சில தடைசெய்யப்பட்ட பகுதிகளை ஒதுக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குகின்றது.
உத்தரவுகள் மற்றும் பணிப்புரைகளை பிறப்பிப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரங்கள்
சட்டத்தின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான உத்தரவுகளை வழங்குவதற்கான அதிகாரங்கள் வரைவின் 98வது பிரிவில் கூறப்பட்டுள்ளதுடன் இந்த உத்தரவுகள் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டியதுடன் ஒரு மாத காலத்திற்குள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மேலும், சட்டமூலத்தின் 99வது பிரிவு அதிகாரிகளுக்கு செயற்படும் விதம் குறித்து பணிப்புரைகளை வழங்குவதற்கு அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது.
சட்டம் ஏனைய சட்டங்களை பிரதியீடு செய்கின்றது
இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் மற்றொரு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் இடையே முரண்பாடு இருந்தால், மற்றைய சட்டங்களை விட இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் மேலோங்கும் என்று பிரிவு 101 கூறுகின்றது.
பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பது தொடர்பான ஏற்பாடுகள்
பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கும் வகையில் பொலிஸ்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப் படைகள் மற்றும் கடலோர காவல்படையினருக்கு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இலங்கை அல்லது வேறு எந்த நாட்டினதும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நிறுவனங்களையும் அவற்றின் வங்கிக் கணக்குகளையும் தடை செய்தல் மற்றும் நிதி சேகரிப்பைத் தடை செய்தல் போன்ற தடையுத்தரவுகளை விதிக்க அமைச்சருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மேற்கண்ட நோக்கங்கள் தொடர்பான பணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும், இடங்களைத் தடை செய்வதற்கும், சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முடிவுரை
இந்த வரைவின் முக்கிய பிரச்சினை பயங்கரவாத குற்றத்தின் மிகவும் பரந்த வரையறையாகும். இந்த வரைவின் ஏற்பாடுகளின் பிரகாரம், தற்போதுள்ள அரசுக்கு எதிராக செயற்படும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை பயங்கரவாதிகளாகக் கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகரித்த ஆபத்து உள்ளது. மேலும், தீவிரவாத செயல்கள் தொடர்பாக கைது செய்யும் அதிகாரம் பொலிஸ்துறை, ஆயுதப்படை மற்றும் கடலோர காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்பான உத்தரவுகளை வழங்குவதில் நீதிவானின் தற்றுணிபை மீறி, பொலிஸ் அதிகாரிகளுக்கு விசாரணைகள் தொடர்பான அதிகமான தற்றுணிபும் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. சட்டங்களை இயற்றுவதற்கும் இடங்களைத் தடை செய்வதற்கும் மேலும் அமைப்புகளைத் தடை செய்வதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
இந்த வரைவு கைது செய்யப்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சில ஏற்பாடுகளை உருவாக்கியுள்ளது என்பதையும், அந்த ஏற்பாடுகள் தற்போதுள்ள சட்டத்தை விட ஆக்கபூர்வமானவை என்பதையும் அங்கீகரிக்கபட வேண்டும். குறிப்பாக, தற்போதுள்ள சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாக்குமூலங்களை ஆதாரமாகப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பான முற்போக்கான திருத்தங்களை வரைவு முன்மொழிந்துள்ளது.
ஆனால் ஒட்டுமொத்தமாக, தற்போதுள்ள சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை விட ஆபத்தான ஏற்பாடுகள் இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.